பதிவு செய்த நாள்
20
ஜன
2016
12:01
கோத்தகிரி: கோத்தகிரி நெடுகுளா ஜெடையசுவாமி திருக்கோவிலில், குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது.கோத்தகிரி அருகே நெடுகுளாவில், நேற்று முன்தினம் நள்ளிரவு,12:00 மணிக்கு, கிராமத்தில் உள்ள ஜெடையசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, மலைப்பகுதியில் உள்ள கோவிலுக்கு ஐயனை ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து குண்டம் நடந்தது. பஜனை, ஆடல், பாடல் நிகழ்ச்சி இடம் பெற்றன. மாலை, 6:00 மணிக்கு, மலைக்கோவிலில் இருந்து, ஐயனை ஊர்வலமாக மீண்டும் கிராம கோவிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.இவ்விழாவில், நெடுகுளா சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.இவ்விழாவின் ஒரு கட்டமாக, ஐயனுக்கே உரித்தான கப்பிடுதல் என்ற நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதன்படி, வெறும் தண்ணீர் மட்டுமே ஊற்றி வைக்கும் மூன்று மண்பானைகளில், கருப்பு நீராக மாறும் பானையில் இருந்து, திருநீரை எடுத்து பக்தர்களின் நெற்றியில் பொட்டு வைக்கப்படும்.இவ்வாறு நெற்றியில் பொட்டு இடுவதன் மூலம், நோய் குறையும் என்பது ஐதீகம். இந்த நிகழ்ச்சி, விழாவின் சிறப்பம்சமாக உள்ளது. இவ்விழாவை ஒட்டி, நெடுகுளா சுற்றுவட்டார கிராமங்கள் விழாகோலம் பூண்டுள்ளன.