பதிவு செய்த நாள்
20
ஜன
2016
05:01
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 17 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா பக்தர்களுக்கிடையே பிரசித்தி பெற்றது. கோவிலின் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த, 1998 செப்., 3ம் தேதி நடந்தது. இதையடுத்து, 17 ஆண்டு கழித்து கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 14ம் தேதி காலை விநாயகர் பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று காலை, 7 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. தீர்த்த குடங்களை, 9.30 மணிக்கு கோவில் முக்கிய பொறுப்பாளர்கள், சென்னிமலை காவேரி சிவசுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் எடுத்துக்கொண்டு, மேளதாளம் முழங்க கோவிலை வலம் வந்தனர். பின் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச்சென்று, அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சரியாக 10.10 மணிக்கு பண்ணாரி மாரியம்மன் கோவில் கோபுரத்தில் பொறுத்தப்பட்ட ஐந்து கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது பக்தர்கள், ‘மாரியம்மா, மாரியம்மா...’ என விண்ணை தொட கோஷமிட்டனர். தொடர்ந்து பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. மதியம், 12 மணிக்கு தசதானம், தசதரிசனம் மஹா அபிஷேகம் மற்றும் தீபாரானை நடந்தது. மார்ச், 7 ம் தேதி வரை தினமும் மாலை, 6 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.