வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் இங்கு வழிபாடு செய்த பின்புதான் நெல் அறுவடை செய்வது, நடவு செய்வது உள்ளிட்ட விவசாய பணிகளை தொடர்வார்கள். இயற்கையின் காவல் தெய்வமாக இந்த அம்மனை இப்பகுதி மக்கள் வணங்குகின்றனர். இக்கோயிலின் கும்பாபிஷேகவிழா ஜன.18 அன்று கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அங்குரார்ப்பணம், காப்புக்கட்டுதல் உள்ளிட்ட முதல்கால யாகபூஜையும், 2 ம் நாள் சுமங்கலிபூஜை, கன்யா, வடுகபூஜை உட்பட 2 ம் கால யாகபூஜைகளும் நடந்தது. இன்று அதிகாலை ஹோமபூஜைகள் நிறைவு செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட பூரண கும்பத்தை சிவாச்சார்யார்கள் சுமந்து கோயிலை வலம் வந்தனர். பின்னர் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. பிள்ளைமார் சமுதாய தலைவர் அய்யனார், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் நாராயணன், நாட்டாண்மைகள், சங்க நிர்வாகிகள், இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர்.