விருத்தகிரீஸ்வரர் கோவில் கொடி மரங்களுக்கு கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2016 11:01
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட கொடி மரங்களுக்கு நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம். இதற்காக, ஆழத்து விநாயகர் சன்னதி, கோவில் பிரதான கொடி மரம், விருத்தாம்பிகை சன்னதி, நுாற்றுக்கால் மண்டபம் உட்பட ஏழு இடங்களில் உள்ள பழைய கொடி மரங்கள் அகற்றி, கடந்த மாதம் 28ம் தேதி சிறப்பு பூஜையுடன் புதிய கொடி மரங்கள் நடப்பட்டன. அவற்றிற்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் பெரியநாயகர் சன்னதியில் முதல் கால யாக பூஜை துவங்கியது. நேற்று காலை 6:00 மணியளவில் இரண்டாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 9:30க்கு மேல் ஆழத்து விநாயகர் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கோவில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர், சுவாமி கொடி மரம் உட்பட வரிசையாக அனைத்து கொடி மரங்களுக்கும் காலை 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.