பதிவு செய்த நாள்
23
ஜன
2016
12:01
பெ.நா.பாளையம்: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேல்முடி ரங்கநாதர் கோவில் அருகே, மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருக்கலாம்’ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், சின்னதடாகம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் மேல்முடி ரங்கநாதர் கோவில் உள்ளது. அடர்ந்த வனத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், சின்னதடாகம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் கோவையில் மாவோயிஸ்ட்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக– கேரள எல்லையில், வனத்துறையினர் மற்றும் போலீசார் மீது, மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவில்கள், மலைக்கிராமங்களை அதிரடிப்படை போலீசாரும், வனத்துறையினரும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். பசுமைக்காடாக நீர்வளத்துடன் கூடிய இடமாக உள்ள, மேல்முடி ரங்கநாதர் கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதியில், பக்தர்கள் என்ற போர்வையில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதால், இப்பகுதியில் வனத்துறையினர் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா கூறுகையில், “பக்தர்கள், மேல்முடி ரங்கநாதரை வழிபட எந்த தடையும் இல்லை. வனவிலங்கு பாதுகாப்பு, மாவோயிஸ்ட் நடமாட்டம், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மேல்முடி ரங்கநாதர் கோவிலில் இரவு நேரத்தில் யாரும் தங்கக் கூடாது என, மாவட்ட வன நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் வனத்துறையின் முன் அனுமதி பெற்று, காலையில் கோவிலுக்கு சென்று, மாலையில் வீடு திரும்பலாம். புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் பக்தர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,’’ என்றார்.