பதிவு செய்த நாள்
23
ஜன
2016
12:01
பொள்ளாச்சி: தைப்பூசத்தை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொள்ளாச்சி வழியே 30க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தை மாதம் வரும் பூச நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்ததாகும். இதற்காக பழநி மலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்வது வழக்கம். பொள்ளாச்சி பகுதியில் முருக பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், பாத யாத்திரையாகவும், பஸ்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்தாண்டு, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மதியம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகிறது. கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியே 24, பொள்ளாச்சி- பழநி 8 என மொத்தம் 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே, பொள்ளாச்சி - பழநிக்கு 161 அரசு பஸ்கள், 25 தனியார் பஸ்கள் வழக்கமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு தைப்பூசம் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என தெரிகிறது. தேவைப்பட்டால், கூடுதலாகவும் பஸ்கம் இயக்கப்படும் என்றனர்.