பதிவு செய்த நாள்
25
ஜன
2016
11:01
கோவை: மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாக, கோவையில் உள்ள மருதமலை கருதப்படுகிறது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. தமிழக இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, கடந்த, 18ம் தேதி கொடியேற்றப்பட்டது. 19ம் தேதி முதல், 23ம் தேதி வரை, சூர்ய பிரபை வாகனம், சந்திர பிரபை வாகனம், வெள்ளி மயில் வாகனம், தங்க மயில் வாகனத்தில், முருகன் திருவீதி உலா வந்தார். முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டன. நேற்று வரை, பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, தேவார இன்னிசை உட்பட நிகழ்ச்சிகள் நடந்தன.
தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள், தைப்பூச திருக்கல்யாண உற்சவம், 10:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள், வெள்ளை யானை வாகனத்தில், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள், காவடி, பால்குடம், பன்னீர் குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்து, பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். மலையின் அடிவாரத்திலிருந்து நடைபயணமாக செல்லும் பாதை, பாதையின் தொடக்கத்தில் உள்ள, தான் தோன்றி விநாயகர், சற்று மேல்புறம் உள்ள இடும்பன் சன்னிதியில், பக்தர்கள் வழிபட்டனர்.
கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா... என்று போற்றியபடி, பக்தர்கள் வலம் வந்தனர். இன்னிசை கலைஞர்களின் தப்பாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்ப, பலர் நடனமாடினர். காலை, 11:30 மணியளவில், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. வள்ளி, தெய்வானையுடன், சுப்ரமணிய சுவாமி, வளாகத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டதால், கோவில் வளாகம் களை கட்டியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று மாலை, 5:00 மணியளவில், தெப்பத்திருவிழா, 26ம் தேதி, மதியம், 12:00 மணியளவில், மஹா தரிசனம், மாலை, 4:30க்கு, கொடி இறக்குதல், 27ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல், 11:00 மணிக்குள், வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.