பதிவு செய்த நாள்
25
ஜன
2016
11:01
திருப்பூர் : சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உட்பட, முருகன் கோவில்களில், "அரோகரா கோஷம் முழங்க, பக்தர் வெள்ளத்தில், தைப்பூச தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. காங்கயம் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வேல் மற்றும் சேவற்கொடி கொண்டு, தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில், தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4:00 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களின் "அரோகரா கோஷங்களுக்கு மத்தியில், கிரிவல பாதையில், அசைந்தாடியபடி, திருத்தேர் உலா வந்தது. 200 மீட்டர் தூரம் இழுக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. இன்றும், நாளையும் கிரிவல பாதையை தேர் சுற்றி வந்து, நாளை நிலைக்கு வரும். ஏராளமான பக்தர்கள் காவடி, தீர்த்தக்குடம் எடுத்தும்; பாத யாத்திரையாகவும் வந்து, வழிபட்டனர்.
குழந்தை வேலாயுதசுவாமி கோவில்: வேலாயுதம்பாளையம் மலைக்கோவில், குழந்தை வேலாயுதசுவாமி கோவில் தைப்பூசத் தேர்த்திருவிழா, 17ல் துவங்கி, தினமும் சிறப்பு பூஜை நடந்து வந்தது. நேற்று காலை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தேவியருடன், திருக்கல்யாண கோலத்தில், குழந்தை வேலாயுத சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, பக்தர்கள் காவடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அபிஷேகம் செய்து வழிபட்டனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம் நடந்தது.
கயித்தமலை கோவில்: ஊத்துக்குளி அடுத்த கயித்தமலை ஸ்ரீவெற்றி வேலாயுதசாமி கோவிலில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள கீழ் தேரில், புஷ்ப அலங்காரத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். காலை, 7:30க்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது; கிழக்கு ரத வீதியில் உலா வந்தது. மாலை, 4:00 மணிக்கு, மீண்டும் மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதி வழியாக தேர் வந்து, நிலை சேர்ந்தது. இன்று, பரிவேட்டை, தெப்ப உற்சவம் நடக்கிறது. மலை தேரோட்டம், 27ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு நடைபெறுகிறது.
பொங்கலூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி, பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். மதியம், தேரோட்டம் நடைபெற்றது. "முருகனுக்கு அரோகரா; கந்தனுக்கு அரோகரா என்ற கோஷங்களுக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக, விநாயகர் தேரோட்டம், அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தேர், கைலாசநாதர் கோவிலை வலம் வந்து, மாலை, 5:40க்கு நிலையை அடைந்தது.
தீர்த்தக்காவடி குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை, பரிவேட்டை; நாளை மாலை, மண்டப கட்டளை; 27ல், மஞ்சள் நீராடலுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு தலைவர் சின்னு, செயல் அலுவலர் சிவராமசூரியன், ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி மற்றும் விழாக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் செய்துள்ளனர்.
அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருநாத சுவாமி கோவிலுக்கு, நூற்றுக்கணக்கான பக்தர்கள், பால்குடம் சுமந்து வந்தனர். ஸ்ரீசண்முகநாதருக்கு, 108 பால்குட அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், சிறப்பு அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல பக்தர்கள், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அனுப்பர்பாளையத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக, பூண்டி கோவிலுக்கு சென்றனர்.
* அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமண்யருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வள்ளி தெய்வானையுடன், சுப்ரமண்யர் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* வஞ்சிபாளையம் அடுத்த அழகர் அப்பிச்சிப்பாறை அங்கையற்கன்னி உடனமர் ஆதீச்சுரர் கோவில், பாலதண்டாயுத சுவாமி கோவில் ஆகியவற்றில், தைப்பூச விழா நடைபெற்றது. பொங்கவழி தோட்டம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து, காவடி ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை அடைந்தது. சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.