பதிவு செய்த நாள்
25
ஜன
2016
11:01
கோவை: கோவை, கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் நடந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை நகரின் பிரசித்தி பெற்ற கோவில்களில், 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, டவுன்ஹாலில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலும் ஒன்று. பிரதோஷ வழிபாட்டுக்கு பெயர் பெற்ற இக்கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் என்று, பக்தர்களால் அழைக்கப்படுகிறது. சனி பிரதோஷம் மற்றும் சோம பிரதோஷம், கோவிலின் தனி சிறப்பு. சனி பிரதோஷத்தன்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வர். கோவிலின் தேரோட்டம், 1993ம் ஆண்டு வரை சிறப்பாக நடந்தது. தேரில் ஏற்பட்ட பழுதால், தேர் வீதியுலா நடக்கவில்லை. இந்து அறநிலையத்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது.ஆறாவது ஆண்டாக, தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 21ம் தேதி கொடியேற்றப்பட்டது. நேற்றுமுன்தினம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 10:10 மணிக்கு துவங்கிய தேரோட்டத்தை, பேரூர் ஆதீனம், இளையபட்டம் மருதாசல அடிகள், துவக்கி வைத்தார். தேரோட்டம், பெருமாள் கோவில் வீதி, என்.எச்., ரோடு, பெரிய கடை வீதி, டவுன்ஹால் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது; தேரில் உலா வந்த முருகன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்தில், தற்காலிக மாற்றம் செய்யப்பட்டது.