பதிவு செய்த நாள்
28
ஜன
2016
11:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே ஜடாமகுட தீர்த்த கோயிலில் பிப்., 22ல் நடக்கவுள்ள மகா மகம் விழாவுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடக்கிறது. ராவணனை வதம் செய்து சீதையை மீட்ட ஸ்ரீ ராமருக்கு பாவம் பிடித்து சோர்வு ஏற்படுகிறது. பின், சிவபெருமான் தலையில் இருந்து வரும் நீரில் உருவான ஜடாமகுட தீர்த்தத்தில், ராமபிரான் புனித நீராடியதும் பாவங்கள் நீங்கி, புது பொலிவு பெற்றதாக ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. இந்த ஜடாமகுட தீர்த்தம் ராமேஸ் வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் தேசிய சாலையில் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ளது. இத் தீர்த்தம் பூமிக்கு அடியில், கங்கை ஆற்றில் பிரியும் கோதாவரியுடன் இணைந்து இருப்பதால் தீர்த்த ஸ்தலமாகவும் திகழ்கிறது. இங்கு 6.3.2004ல் நடந்த மகாமகத்தில், 1.50 லட்சம் பக்தர்கள் புனிதநீராடினர். இந்தாண்டு 3 லட்சம் பக்தர்கள் நீராடுவார்கள் என, எதிர்பார்க்கப் படுகிறது.
பக்தர்கள் புனித நீராடவும், தரிசனம் செய்யவும் தேவையான வசதிகள், ஏற்பாடுகள் குறித்து ராமேஸ்வரம் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில் வாகணன் ஆய்வு செய்தனர். மகாமகம் விழாவுக்கு பந்தல் அமைப்பதற்காக ஜன., 29ல் முகூர்த்த கால் ஊன்றப்படுகிறது. ஜடாமகுட கோயிலை சுற்றி வளர்ந்துள்ள முள்மரங்கள், செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். கிராவல் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என, பக்தர்கள் விரும்புகின்றனர்.