பதிவு செய்த நாள்
01
பிப்
2016
12:02
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசாமி கோவிலில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக வைக்கப்பட்ட தகவல் பலகையால், பக்தர்கள் குழம்பி உள்ளனர். தமிழகத்தில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் பாரம்பரிய உடை மட்டுமே அணிந்து வரவேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவு, ஜன., 1ம் தேதி முதல், அனைத்து கோவில்களிலும் அமல்படுத்த வேண்டும் என, உத்தரவும் பிறப்பிக்கப்ட்டது. பின், சில நாட்களிலேயே அந்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இடைக்கால தடையும் விதித்தது. இந்நிலையில், திருப்போரூர் கந்தசாமி கோவிலின் நுழைவாயிலின் இருபுறமும், ஆடை கட்டுப்பாட்டிற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆடை கட்டுப்பாட்டிற்கு இடைக்கால தடை உள்ளதா, இல்லையா என, குழம்புகின்றனர். மேலும், பாரம்பரிய உடையோடு மட்டுமே, கோவிலுக்கு வரும்படி, கோவில் நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். இதனால், கோவில் நிர்வாகத்தினரிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர், முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கந்தசாமி கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, ஆடை கட்டுப்பாட்டிற்கு இடைக்கால தடை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இந்த பலகையை அகற்றும்படி எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை, என்றனர்.