பதிவு செய்த நாள்
16
ஆக
2011
10:08
திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவிலில் நடைபெற்ற தேவ பிரசன்ன நிகழ்ச்சியின் போது, தெரிவிக்கப்பட்ட பரிகார பூஜைகளில் இரண்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் இருக்கும் ரகசிய அறைகளில், ஏராளமான பொக்கிஷங்கள் இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய ஐந்து பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. குழுவினர் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் முன்பாக, சுவாமியின் கருத்தை அறிய, கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளை மற்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தேவ பிரசன்னம் பார்க்க முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை தேவ பிரசன்னம் (சுவாமியின் கருத்து கேட்டல்) பார்க்கப்பட்டது. அப்போது, கோவிலில் மூலவருக்கு அதிருப்தியான பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளதால், தோஷங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு பரிகார பூஜைகள் செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பரிகாரமாக செய்யவேண்டிய சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் குறித்த நீண்ட பட்டியலையும் தேவ பிரசன்னம் நடத்தியவர்கள், மன்னர் குடும்பத்தினரிடம் அளித்தனர். அந்த பரிகார பூஜைகளில் இரண்டான பகவதி சேவா மற்றும் மிருத்யுங்ஜெய ஹோமம் ஆகியவை, கோவிலில் கடந்த இரு தினங்களாக நடத்தி முடிக்கப்பட்டன. இதன்பின், திரிகால பூஜை, ஒரு லட்ச திலக ஹோமம், 24 ஆயிரம் மகா சுதர்சன ஹோமம், சுகிர்த ஹோமம், லகு சுதர்சன ஹோமம், வேதபாராயணம், சக்ராப்த பூஜை ஆகிய பரிகார பூஜைகள் ஒவ்வொன்றாக நடத்தப்பட உள்ளன. எல்லாவற்றையும் சித்திரை மாதத்திற்குள் நடத்தி முடிக்க, மன்னர் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.