செஞ்சி: தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் நடந்த தைப்பூச விழாவில், ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். செஞ்சி தாலுகா, தேவதானம் பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதில் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி அபிஷேகம் செய்து, அலகு குத்தியும், தேர் இழுத்தும் வீதி உலா வந்தனர். தண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகமும், விபூதி அலங்காரமும் செய்தனர். அதனை தொடர்ந்து அருட்பெருஞ்ஜோதி சாமிகள் மார்பு மீது மாவு இடித்தல், மிளகாய் சாந்து அபிஷேகம் மற்றும் செடல் சுற்றுதல் நடந்தது. மாலை 4:30 மணிக்கு தீமிதி விழாவும் இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.