திருநெல்வேலி மாவட்டம் தென்கோடியில், தெற்கு கருங்குளம் என்ற ஊரில் உள்ளது பூ ஐயப்பன் கோயில். இங்கு பங்குனி உத்திர பெருநாளில் அதிசய கொழுக்கட்டை வழிபாடு நடைபெறுகிறது. இந்நாளில் முழுக்க முழுக்க ஆண்களே தயார் செய்யும் கொழுக்கட்டை சாமிக்குப் படைக்கப்படுகிறது. 63 கிலோ பச்சரிசியை ஆண்களே மாவாக இடிக்கிறார்கள். விரதமிருந்து பகல் முழுவதும் வாயைத்துணியால் கட்டிக்கொண்டு (எச்சில் படக்கூடாது என்பதால்) கல் உரலில் மாவாக இடித்து கொழுக்கட்டை தயாரான பின்பே அத்துணியை அவிழ்ப்பார்கள். இந்த மாவை நீர் விட்டு பிசைந்து, பூரணமும் வைத்து இலைகளால் மூடி பொட்டலம் போல் உருண்டை வடிவில் கட்டி கோயிலுக்கு எடுத்துச் செல்வர். அங்கு சாமியாடி ஒருவர் அருள் வந்து ஆடிக்கொண்டே கொழுக்கட்டை உருண்டையைத் தூக்கி கோயில் முன் எரியும் தணல் நடுவில் போட்டு வேக வைப்பார். கொழுக்கட்டை வெந்தபின் சாமிக்குப் படைத்து வழிபட்டு, பின் கொழுக்கட்டையைப் பிரித்து ஊரிலுள்ள எல்லா வீடுகளுக்கும் பிரசாதமாகத் தருவர்.