பதிவு செய்த நாள்
03
பிப்
2016
12:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 109 ஆண்டுகளுக்கு பிறகு ஆகம முறைபடி இரண்டாம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கதவு திறக்கப்பட வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராமாயண வரலாற்றில் தொடர் புடைய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சுண்ணாம்பு சுவரில் கட்டியிருந்த சுவாமி, அம்மன் கருவறையை இடித்து, 1907-25ம் ஆண்டில் கருங்கல்லில் கருவறை, முதல் பிரகாரம் அமைக்கப்பட்டது. இத்துடன் சுண்ணாம்பு சுவரில் இருந்த 2ம் பிரகாரமும் இடித்து, கருங்கல்லில் கட்டுமான பணிகள் துவங்கியது. நிதி பற்றாக்குறையால் இரண்டாம் பிரகாரம் வடக்கில் கட்டுமான பணிகள் பாதியில் நின்றது. இதனால் இரண்டாம் பிரகாரத்தில் இருந்து வடக்கு வாசலுக்கு செல்லும் பாதை பாது காப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 400 ஆண்டுகளாக மொட்டை கோபுரமாக காட்சியளித்த வடக்கு, தெற்கு ராஜகோபுரம் சீரமைக்கப்பட்டு ஜன.,20ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஆகம முறைபடி வடக்கு ராஜகோபுரம் எதிரே மூடிகிடந்த இரண்டாம் பிரகார பாதையை திறக்க வேண்டும் என முடிவானது. இதற்காக 109 ஆண்டு களுக்கு பிறகு சுண்ணாம்பு சுவரை இடித்து, பக்தர்கள் இரண்டாம் பிரகாரம் வழியாக கோயிலுக்குள் செல்ல புதிய "இரும்பு கேட் அமைக்கபட்டது. ஆனால், புதிய கதவை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், மீண்டும் மூடி வைத்தது ஆகம விதிக்கு எதிரானது. எனவே இரண்டாம் பிரகாரம் வடக்கு கதவை திறக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில்,""109 ஆண்டுகளுக்கு பிறகு வடக்கு இரண்டாம் பிரகாரத்தில் அமைத்துள்ள புதிய கதவு வழியாக பக்தர்கள் சிரமம் இன்றி செல்ல, "ஸ்லோப் பாதை அமைக்கும் பணி முடிந்ததும், தை அமாவாசை (பிப்.,8) அன்று புதிய கதவு திறக்கப்படும், என்றார்.