பதிவு செய்த நாள்
04
பிப்
2016
11:02
திருப்பூர்: உடுமலை அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான புலிக்குத்தி கல் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தேவனூர்புதூரில், மிகவும் பழமையான புடைச்சிற்பம், சிறிய கோவிலுக்குள் உள்ளது. கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், அவிநாசி வரலாற்று ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர், அங்கு சென்று ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் காடும், காடும் சார்ந்த முல்லை நிலப்பரப்பும் அதிகளவில் இருந்தது. பத்தாம் நூற்றாண்டில், கொங்கு சோழர் காலத்தில், விவசாயம் அதிகரித்தது. கால்நடைகளை, விவசாயிகள் வளர்த்தனர். அவற்றுக்கு புலிகளால் ஆபத்து இருந்ததால், அவை இருந்த பட்டிகளை, வீரர்கள் காவல் காத்து வந்தனர். கால்நடைகளை வேட்டையாட வரும் புலியுடன் சண்டையிட்டு, பல வீரர்கள் இறந்துள்ளனர். அவர்களின் நினைவாக, நடுகற்கள் நடப்பட்டன. அதில், புலியுடன் போரிடும் தோற்றத்துடன், வீரரின் சிற்பங்களை வடித்தனர்.
இவ்வாறான நடுகற்கள், புலிக்குத்தி கல் எனவும், சில இடங்களில், நரிகடிச்சான் கல் எனவும் அழைக்கப்படுகிறது. உடுமலை தேவனூர்புதூரில், நவக்கரை பாலம் அருகே, புலிக்குத்தி கல் புடைச்சிற்பம் உள்ளது. இதை, நரிகடிச்சான் கோவில் என்றும் அழைக்கின்றனர். ஆறடி நீளம், ஐந்தடி உயரம் கொண்டு கருவறை போன்ற அமைப்பில், புலிக்குத்தி கல், புடைச்சிற்பமாக காணப்படுகிறது. கற்களால், கோவில் போல் கட்டியுள்ளனர். மூன்றடி நீளம், இரண்டரை அடி உயரம் கொண்ட சிற்பத்தில், ஒரு வீரன், புலியின் வாய் மற்றும் வயிற்றுப் பகுதிக்குள் வாளை செருகிக்கொண்டும், புலியின் கால்கள், வீரனின் வலது கையை பற்றி, தாக்குவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சிற்பம், நிலத்தில் புதைந்துள்ளதால், அதன் கீழே உள்ள பகுதிகள் தெரியவில்லை. தலைப்பாகையுடன் உள்ள வீரன், தலையில் வலப்பக்கம் கொண்டை, இடையில் குறுவாள் ஆகியன உள்ளன. புலியை கொன்ற வீரன், அப்பகுதியை சேர்ந்த குறுந்தலைவனாக இருக்கக்கூடும். கிராம மக்கள், இந்த நடுகல் சின்னத்தை, கோவிலாக வழிபட்டு வருவதால், பல நூறு ஆண்டுகளாக, இத்தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.