பதிவு செய்த நாள்
17
ஆக
2011
11:08
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து 15 கி.மீ., தொலைவில் குடிகொண்டிருக்கும் நயினார்கோவில் நாகநாதர் சுவாமி கோயில் குப்பைமேடுகளின் சங்கமமாய், சிதிலமடைந்து காட்சியளிப்பதால் பக்தர்கள் வேதனையில் மூழ்கி உள்ளனர். தோஷம் நீக்கும் கோயிலை சீர்படுத்தபடுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமன் பாதம் பதித்த புண்ணிய பூமியாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி வருவோர், திருமண தடை, உடல் நோய்கள் தீர்க்க உள்ளிட்ட தோஷ நிவர்த்திக்கு வருவோர் கோயிலின் நிலை கண்டு கலங்கி செல்கின்றனர். பஸ் ஸ்டாப்பில் இருந்து கோயிலுக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. குளத்தைச் சுற்றி குப்பை மேடுகள், துணிகள், எச்சில் இலைகள், பாசம் பிடித்த படித்துறைகள் என வேலி இல்லாத குளமாக உள்ளதால் பக்தர்களை பயமுறுத்துகிறது. கோட்டைச் சுவர், ராஜ கோபுரம் மற்றும் மணங்கல்லால் உருவாக்கப்பட்டுள்ள வேறெங்கும் இல்லாத சிறப்பு வாய்ந்த சுவாமி விமானம் உள்ளிட்டவைகளின் மீது செடி, கொடிகள் வளர்ந்து மரமாக விரிய ஆரம்பித்துள்ளன. கோயில் வாசலில் இருந்து உட்புறம் வரை பிச்சைக்காரர்களின் அவல குரல் பக்தர்களை அங்கலாய்க்க வைக்கிறது. பிணி நீங்க உப்பு, பூ, மிளகு போடுபவர்களுக்காக தனியாக தொட்டி இல்லாமல் கொடி மரம் மற்றும் நந்தியைச் சுற்றி பேப்பர், பிளாஸ்டிக் குவியல்களுடன் அரித்து வருகிறது. வழுக்கும் தரை: பாசம் பிடித்த மண்டபங்கள், சுவாமி சன்னதியில் தேங்காய் உடைத்த தண்ணீர் செல்ல வழியின்றி உட்புற தளம் முழுவதும் வழுக்கி விடும் வகையில் உள்ளது. காரைகள் பெயர்ந்தும், சன்னதி முழுவதும் எண்ணெய் பிசுக்குடன் உள்ளன.இருள் சூழ்ந்த அம்மன் சன்னதியிலும் இதே நிலையில் சறுக்கி விடுகின்றன. நாயன்மார்கள், தெட்சிணாமூர்த்தி சன்னதிகள் வவ்வால்களின் கூடாரமாகி அதன் எச்சங்கள் சுவாமிகளின் மீதும், நடந்த செல்லும் பாதையும் பக்தர்களை முகம் சுழிக்க வைக்கின்றன. வெளிப் பிரகாரத்தில் உள்ள சேவல் விடும் அறை சுத்தப்படுத்தாமலும், அதன் அருகில் கட்டப்பட்ட பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் அறை பாழடைந்து கிடக்கிறது. கழிப்பறை வசதி செய்யப்பட்டிருந்தாலும், அதுவும் பராமரிப்பின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் பிரகாரத்தில் உள்ள சாக்கடை மற்றும் புல் வெளிகள் கழிப்றையாக மாறியுள்ளன. பக்தர்கள் வேண்டுதலுக்காக வைத்துள்ள நாகர் சிலைகள் அதன் அருகில் பாசம் படிந்த சாக்கடை, குப்பைகள் மூடி மறைத்துள்ள கிணறு என பாவமாக காட்சியளிக்கிறது தோஷம் நீக்கும் இடமான நயினார்கோவில். நூற்றாண்டை கடந்து நிற்கும் கோயிலில் லட்சக்கணக்கான மதிப்பு கொண்ட சுவாமி, அம்பாள் வீதியுலா வருவதற்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான வெள்ளியால் செய்யப்பட்ட கலைநயம் மிக்க யானை, குதிரை, சிங்கம், ரிஷபம், மயில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பராமரிப்பின்றி தூசி படிந்தும் உள்ளன. துணியால் மூடப்படாமல் உள்ளதுடன், சேதமடைந்துள்ளதால் சீல் வைத்த அறைகளில் தனது உருவத்தை இழந்து சிதைந்து வருகின்றன.
பக்தர்களின் வேதனைகள்: ரேவதி(சிவகங்கை): சிறு வயதில் இருந்தே நயினார்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கிறேன். அன்றிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளதுடன், கோயில் பிரகாரங்கள் சிதிலமடைந்து மேலும் மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளது. மீனம்பாள்(நயினார்கோவில்): குளத்தின் படிகள் சேதமடைந்தும், பாசிபடர்ந்தும், துணிகள் மற்றும் குப்பைகளின் மேடாக உள்ளது. இதனை சுத்தப்படுத்துவதுடன் குளத்தைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். பெண்கள் உடை மாற்ற தனி அறை கட்ட வேண்டும். மேலும் குளத்தில் தண்ணீர் இல்லாத நாட்களில் குளிக்க போர் வசதி செய்ய வேண்டும். செல்வி(நயினார்கோவில்): பக்தர்கள் வந்து செல்லும் இங்கு சாப்பிட அறை இல்லை. கண்ட இடங்களில் உணவருந்தி இலைகளை வீசிச் செல்கின்றனர். இதனை முறைப்படுத்த வேண்டும். குடிநீர் வசதியில்லை. சுகாதாரமற்ற நீரை குடிக்க வேண்டியுள்ளது. சுவாமி வாகனங்களை சீரமைக்க வேண்டும். ரோகிணி(நயினார்கோவில்): கோபுரங்களில் செடிகள் வளர்ந்தும், வவ்வால்கள் பெருகி துர்நாற்றத்துடன் உள்ளது. தோச நிவர்த்தி, பிணி போக்கும் நயினார்கோயிலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரகாரங்களில் மின் விளக்கு அமைக்க வேண்டும். சுவாமி, அம்பாள் சன்னதிகளில் தேங்காய் நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.