பதிவு செய்த நாள்
09
பிப்
2016
12:02
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 21 ஆண்டுகளுக்குப்பின் வரும் மார்ச், 18ல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் சூலக்கல் மாரியம்மன் கோவில் முக்கியமானது. ஆண்டுதோறும், 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அம்மனை நேர்கொண்டு வழிபட்டு, மாவிளக்கு எடுத்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக திருவிழாவும், திருத்தேர்வடம் பிடித்தலும் நடக்கவில்லை. பல நுாறாண்டுகள் பழமையான திருத்தேர், புதுப்பிக்கப்பட்ட பிறகே, விழா நடத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டதே தாமதத்துக்கு காரணமாகும். கடந்த ஆண்டு, பழுதடைந்த தேருக்கு பதிலாக, புதுத்தேர் அமைக்கும் திருப்பணிகள், 27.5 லட்சம் ரூபாய் செலவில் துவங்கின. பெரம்பலுார் மற்றும் பழநியைச் சேர்ந்த, 15 சிற்பிகள் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓராண்டாக நடந்த இத்தேர் வடிவமைப்பு பணி, சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், சமய பெரியோர் கூடி, கும்பாபிஷேக தேதியை தீர்மானித்தனர். வரும் மார்ச், 18ம் தேதி சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், 21 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. கோவில் சுற்றுச்சுவர், கோவில் வளாக தரைதள சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட திருப்பணிகள் வேகமாக நடக்கிறது. இக்கோவில் திருவிழா நாட்களில் ஜமீனுக்கு உட்பட்ட, 8 கிராமங்களிலும், ஜமீனுக்கு உட்படாத 10 கிராமங்கள் என, 18 கிராமங்கள், விழாக்கோலம் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.