பதிவு செய்த நாள்
17
பிப்
2016
11:02
ஊட்டி: பொக்காபுரம் மாரியம்மன் கோவில் விழா, உற்சாகமாக நடந்தது. ஊட்டி மசினகுடி அருகே, அடர்ந்த வனப்பகுதியில், அமைந்துள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில், ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
இவ்வாண்டின் விழா, கடந்த, 12ம் தேதி துவங்கியது. அம்மனுக்கு தினமும் காலை முதல் மாலை வரை, சிறப்பு அபிஷேகம், பூஜைகள், திருவிளக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஊட்டி, கூடலுார், மசினகுடி, மாவனல்லா உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பக்தர்கள் விரதம் இருந்து கரகம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக பொக்காபுரம் கோவிலை வந்தடைந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது; இரவு, 10:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் சங்கர், தேரை வடம் பிடித்து இழுத்து, துவக்கி வைத்தார். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சீனிவாச ரெட்டி, மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவை காண, மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், மக்கள் வந்தனர். கோவில் வளாகத்தை சுற்றி, ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், உணவுக் கூடங்கள், விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்ததால், மக்கள், குழந்தைகள் உற்சாகமாய் பொழுதை கழித்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. குறுகலான மசினகுடி மலைப் பாதையில், வாகனங்கள் அணி வகுத்து வந்ததால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது.