பதிவு செய்த நாள்
19
பிப்
2016
12:02
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின், குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு, போதிய வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலின் குண்டம் திருவிழா, கடந்த, 8ம் தேதி துவங்கியது. வரும், 21ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு மேல் மயானப் பூஜை, 24ம் தேதி, காலை, 9:00 மணிக்கு மேல், குண்டம் இறங்குதல் நடக்கின்றன. விழா பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், சப்-கலெக்டர் காயத்ரி தலைமையில் நேற்று நடந்தது. தாசில்தார் ஜெயசித்ரா, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயந்தி, டி.எஸ்.பி.,க்கள் முத்துராஜன், சார்லஸ் முன்னிலை வகித்தனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி கமிஷனர் கார்த்திக் விழா குறித்து பேசினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். உணவு கலப்படம் குறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழா முடியும் வரை, மின்தடை, மின்கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, மின்வாரிய அதிகாரிகள், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். கோவில் மற்றும் குண்டம் திருவிழா நடக்கும் பகுதிகள் துாய்மையாக இருக்க, ஆனைமலை மற்றும் அருகில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம். பாதுகாப்பு வசதிகளுக்கு, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்பு துறையினர், தயார் நிலையில் இருக்க வேண்டும். பக்தர்களின் போக்குவரத்து வசதிக்கு, போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். தற்காலிக கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். உரிய இடங்களில், மின்விளக்குகள் பொருத்த வேண்டும். இரண்டு முதலுதவி மையம், இரண்டு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.