பதிவு செய்த நாள்
26
பிப்
2016
11:02
காரைக்கால்: திருநள்ளார் பேட்டை கிராமத்தில் கோவிலில் திருடு போன அம்மன் சிலையை, போலீசார் நேற்று மீட்டனர். திருநள்ளர் தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்தின் கீழ், பேட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து வருவதால், கோவிலுக்கு சொந்தமான 1.5 அடி உயர மாரியம்மன் வெண்கல சிலை, அய்யனார் சிலை உள்ளிட்டவை, பேட்டை மெயின் ரோட்டில் உள்ள மன்மதன் கோவில் வளாகத்தில் வைக்கப் பட்டன. கடந்த 21ம் தேதி மன்மதன் கோவில் மேற்கூரை ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ஒன்றரை அடி உயர மாரியம்மன் வெண்கல சிலையை திருடிச் சென்றனர். இது குறித்து திருநள்ளார் இன்ஸ்பெக்டர் ஆடலரசன், சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று, திருடு போன மாரியம்மன் சிலை, பேட்டை மன்மதன் கோவில் தெரு பகுதியில் கிடப்பதாக ஊர் பஞ்சாயத்தாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து திருநள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் விரைந்து வந்து, சிலையை கைப்பற்றினர். மேலும், சிலை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.