பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு நிரந்தரமானது ஒரு போதும் அழிக்க முடியாதது. பரமாத்மா விரும்பினாலும் ஜீவாத்மாவின் தொடர்பை விட்டுவிட முடியாது. ஜீவாத்மா விரும்பினாலும் பரமாத்மாவின் தொடர்பை விட்டு விட முடியாது. ஆன்மாக்களைத் தன் உடைமையாகக் கொண்டவன் இறைவன், நாம் அவனுக்குச் சொந்தமானவர்கள். இறைவனாகிய உடலுக்குப் பல உறுப்புகள் போன்று நாம் இருக்கிறோம். இறைவன் தன் படைப்பில் இரண்டறக் கலந்திருக்கிருன்றன. மலரில் மணம் இருப்பதுபோல், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கிறான் என்கிறார் கபீர்தாசர். நமக்கு ஒரு காலத்தில் உதவி செய்வதாக இருப்பது, மற்றொரு காலத்தில் உதவாததாகப் போகக்கூடும். ஒரு சமயத்தில் நமக்குத் துணையாக இருப்பவர். மற்றொரு சமயத்தில் துணையாக வராமல் போகவும் கூடும். ஆனால் இறைவனோ எப்போதும், எல்லாக் காலங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும், நமக்குத் துணையாக நம்மை விட்டுப் பிரியாமல் இருக்கிறான். நாம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி - அக்கம்பக்க மாநிலங்களில் இருப்பவர்களைப் பற்றி - உலகிலுள்ள நாடுகளைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் நமக்குள்ளேயே இருக்கும் இறைவனை நாம் உணர முற்படுவதில்லை.