பதிவு செய்த நாள்
02
மார்
2016
12:03
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு கொண்டத்து பத்ர காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று நடக்கிறது. இதில் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், இரண்டு நாளுக்கு முன்பிருந்தே வரிசையில், இடம் பிடித்து காத்திருந்தனர். விழா கடந்த, 16ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் தீ மிதிக்க ஆண்கள், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் என, 7,000த்துக்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் உள்ளனர். குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்நிலையில் முதலில் குண்டம் இறங்க வேண்டும் என்பதற்காக பண்ணாரி, பாரியூரைப் போல் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே, ஏராளமான பெண்கள், குழந்தைகளுடன், வரிசையில் இடம் பிடித்து காத்திருந்தனர். வெயில் அதிகமாக இருந்ததால், நிர்வாகம் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பந்தலை தாண்டி பலர் சேலை, வாழை மட்டைகளை கொண்டு, தற்காலிக கூரை அமைத்து அமர்ந்திருந்தனர். குண்டம் இறங்கும் நிகழ்வை தொடர்ந்து, பொங்கல் வைபவம், இரவு அம்மன் திருவீதி உலா நடக்கிறது.