பதிவு செய்த நாள்
02
மார்
2016
12:03
ஆத்தூர்: ஆத்தூர் அருகே வசிஷ்ட நதிக்கரை பகுதியில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த, ஏழு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர், ஏத்தாப்பூர், தலைவாசல் வழியாக செல்லும் வசிஷ்ட நதிக்கரை பகுதியில், 11 முதல் 13ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட, ஐந்து பஞ்சபூத சிவன் கோவில்கள் உள்பட, மொத்தம், 21 சிவன் கோவில்கள் உள்ளன. ஆத்தூரை சேர்ந்த, தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன் என்பவர் வசிஷ்ட நதி பகுதியில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில், தேவியாக்குறிச்சி கிராமத்தில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு நடுகல், பெரியேரி, இந்திரா நகர், ஆறகளூர் ஆகிய இடங்களில், தலா இரண்டு நடுகல் என, மொத்தம் ஏழு போர் வீரர்களின் நடுகற்களை கண்டுபிடித்துள்ளார்.
தொல்லியல் ஆய்வாளர் வெங்கடேசன் கூறியதாவது: ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில், ஏழு இடங்களில் கிடைத்துள்ள நடுகற்கள் உருவத்தின் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பு, வில், அம்பு வைக்கும் கூடை மற்றும் காதில் அணிகலன் அணிந்த போர் வீரன் உருவம் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளது. 12, 13ம் நூற்றாண்டில் மகதை மண்டலமாக இருந்த இப்பகுதியில், கால்நடைகளை கைப்பற்றுதல், அதை மீட்பது போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறிப்பிடுகிறது. எதிரி நாடுகளுடன் நடந்த போரில், வீர மரணம் அடைந்தவர்களுக்கான நடுகல், இப்பகுதியில் நிகழ்ந்துள்ள போர்களை பதிவு செய்யும் வரலாற்று நிகழ்வுகளாக உள்ளதால், இந்த நடுகற்களை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.