பதிவு செய்த நாள்
02
மார்
2016
12:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கோவில் சார்பில், கிரிவலப்பாதையில் கட்டப்பட்ட சன்னியாசிகள் மடத்தை, காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். இங்கு தங்க, தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, சாதுக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், திருநேர் அண்ணாமலை கோவில் அருகில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சன்னியாசிகள் மடம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில், 12 அறைகளும், முதல் மாடியில், 12 அறைகளும் உள்ளன. ஒரு அறையில், ஒருவர் மட்டும் தங்கும் அளவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேன், கட்டில், மெத்தை போடப்பட்டுள்ளது. இங்கு, தீட்சை பெற்ற சாதுக்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், ஆகியோர், 48 மணி நேரம் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். சாதுக்கள் தீட்சை பெற்றதற்கான அத்தாட்சி கடிதம் கொண்டு வர வேண்டும். மற்றவர்களுக்கு இங்கு தங்க அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது கிரிவலப்பாதையில் உள்ள பிளாட்பாரத்தில், 3,000 மேற்பட்ட சாதுக்கள் வசிக்கின்றனர். இவர்கள் இங்கு தங்க அனுமதி கிடையாது என, கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. கிரிவலப்பாதையில், பத்து ஆண்டுகளாக வசிக்கும் சாது முருகானந்தம் கூறியதாவது: நாங்கள் காலம், காலமாக இங்கேயே பிளாட்பாரத்தில் வசித்து வருகிறோம், இங்கு உள்ளவர்களில், 60 சதவீதம் பேர், தீட்சை பெற்றவர்கள்தான். ஆனால், தீட்சை பெற்றதற்கான அத்தாட்சி கடிதம் எங்களிடம் இல்லை. அதனால் இங்கு தங்க அனுமதி கிடையாது என, கூறி விட்டனர். நிரந்தரமாக இங்கேயே வசிக்கும் எங்களுக்கு, மழைக்கு ஒதுங்க கூட இடமில்லை. இங்கு வாழும் சாதுக்களை, பிச்சைக்காரர்கள் என்று கூறுகின்றனர். வசதி படைத்த மடாதிபதிகள், பீடாதிபதிகள் தங்க, அரசு கெஸ்ட் அவுஸ் கட்டி தந்துள்ளது. ஆனால், ஏழைகளாகிய எங்களை நடுரோட்டில் உட்கார வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.