பதிவு செய்த நாள்
02
மார்
2016
12:03
ராமேஸ்வரம்: தினமலர் செய்தி எதிரொலியாக, ராமேஸ்வரத்தில் 2 ஆண்டுகளாக மூடிகிடந்த கோயிலுக்கு சொந்தமான பக்தர்கள் ஓய்வு கூடத்தை, நேற்று முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் ஆண், பெண் பக்தர்களுக்கு என ரூ. 2 கோடியில் ஒய்வு கூடம் அமைக்கப்பட்டு, 30 மாதங்களாக திறக்காமல் மூடி கிடந்தது. இதனால் ஏழை பக்தர்கள் கோயில் நான்கு ரதவீதி, அக்னி தீர்த்த கரையில் ஓய்வெடுத்து சென்றனர். மேலும் ஓய்வு கூடத்திற்குள், குடிமகன்கள் புகுந்து மது போதையில் கும்மாளமிட்டு, சமூக விரோத செயலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பிப்.,16ல் தினமலரில் செய்தி வெளியானது. இச்செய்தியை, இந்து அறநிலைதுறை அதிகாரிகள் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து நேற்று, பக்தர்கள் ஓய்வு கூடத்தின் கல்வெட்டை முதல்வர் ஜெ., திறந்து வைத்தார். இதன் பின், மூடி கிடந்த ஓய்வு கூடம் திறந்து, குத்து விளக்கு ஏற்றினர். இதில், கோயில் இணை ஆணையர் செல்வராஜ், நகராட்சி தலைவர் அர்ச்சுணன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், நகராட்சி துணை தலைவர் குணசேகரன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் கே.கே. அர்ச்சுணன், அதிமுக அவை தலைவர் பிச்சை பலர் பங்கேற்றனர்.