பதிவு செய்த நாள்
03
மார்
2016
11:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று வெள்ளி தேரோட்டம் துவங்கியது. பொள்ளாச்சி நகரின் காவல் தெய்வமாக வழிபடப்படும் மாரியம்மன் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை மாரியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மாலை கோவில் வளாகத்தில் இருந்து, முதல் நாள் தேரோட்டம் துவங்கியது. இதில் 12 அடி உயரமுள்ள மரத்தேரில் விநாயகரும், 21 அடி உயரமுள்ள வெள்ளித் தேரில் மாரியம்மனும் எழுந்தருளினர்.
கோவில் வளாகத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்திற்கு இடையே, கோவில் நிர்வாகத்தார், ஊர் முக்கியஸ்தர்கள் வடம் பிடித்து, இரவு ௮.௪௦ மணிக்கு விநாயகர் தேரோட்டத்தையும், 8:58 மணிக்கு வெள்ளித்தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். கோவிலில் இருந்து வெளியில் வந்த தேர், மார்க்கெட் ரோடு வழியாக, வெங்கட்ரமணன் வீதிக்கு வந்து நிலை கொண்டது. நாளை மாலை வரை தேர் அதே இடத்தில் நிலை கொள்ளும். பிறகு இரண்டாம் நாள் தேரோட்டமாக, உடுமலை ரோடு வழியே சென்று, சத்திரம் வீதியில் நிலை கொள்ளும். நாளை மாலை அங்கிருந்து புறப்பட்டு, தேர்நிலைக்கு வந்து சேர்வதுடன், மூன்று நாள் வெள்ளித் தேரோட்டம் நிறைவு பெறும். தேர் நிலை கொள்ளும் இடங்களில், நாள் முழுக்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உப்பு படைத்து, அம்மனை வழிபடுவது வழக்கம்.
ஐ.ஜி., ஆய்வு: நேற்று பொள்ளாச்சி வந்த ஐ.ஜி., ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி., ரம்யா பாரதி, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். மேலும் மாரியம்மன் தேரோட்டம் நடக்கும் பகுதிகளை பார்வையிட்டு, அங்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொள்ளாச்சி போலீசாரிடம் அறிவுறுத்தினர்.