பதிவு செய்த நாள்
04
மார்
2016
11:03
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக சாலை மற்றும் யாக குண்டங்கள் அமைக்கும் பணி நேற்று துவங்கியது; விழாவை சிறப்பாக நடத்த, மாவட்ட நிர்வாகமும் ஆலோசனை நடத்தியுள்ளது. திருப்பூர் விசாலாட்சி அம்மன் உடனமர் விஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், மார்ச், 18ல் நடக்கிறது. 13ம் தேதி மாலை, தீர்த்தக்குட ஊர்வலம், கலசங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. மறுநாள், விக்னேஸ்வரர் பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்குகிறது. 15ல், நவக்கிரக ஹோமம், பரிவார கலாகர்ஷண பூஜை உள்ளிட்டவையும், மாலை, 5:35க்கு, விக்னேஸ்வரர் பூஜையுடன், முதல்கால யாக பூஜை துவங்குகிறது. 16ம் தேதி காலை, இரண்டாம் காலம்; மாலை, மூன்றாம் கால யாக பூஜை; 17ம் தேதி காலை, நான்காம் காலம், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடைபெற உள்ளன.
மார்ச், 18 காலை, 6:05க்கு, ஆறாம் காலயாக பூஜை துவங்கி, பிம்பசுத்தி வழிபாடு, நாடி சந்தானம், நிறைவேள்வி பூஜையை தொடர்ந்து, கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:45க்கு, விசாலாட்சி அம்மன் உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி மூலாலய விமானங்களுக்கும், பரிகார விமானங்கள், ராஜகோபுரத்துக்கும், மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை, 10:05க்கு, கோவில் மற்றும் பரிவார தெய்வ மூலாலயங்களின் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை, 5:00க்கு, மகா அபிஷேக பூஜை; இரவு, 7:00க்கு, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அர்ச்சகர் ராஜாபட்டர் தலைமையிலான குழுவினர், ஸர்வசாதகம் நடத்த உள்ளனர். யாகசாலை மற்றும் யாக குண்டங்கள் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. கோவில் முன்மண்டபத்தில், 40 அடி நீளம், 18 அடி அகலத்தில், யாகசாலை அமைக்கப்படுகிறது. விஸ்வேஸ்வரர் மற்றும் விசாலாட்சி அம்மன் நவகுண்டம்; விநாயகர் மற்றும் சுப்ரமணியருக்கான பஞ்ச குண்டம்; பரிவாரங்களுக்கான, 10 யாக குண்டங்கள் என, 38 வகையான யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. சுவாமி மற்றும் அம்மனுக்கான, 18 யாக குண்டங்களும், விநாயகர் மற்றும் சுப்ரமணியருக்கான குண்டம், முன்மண்டப மேடையிலும்; பரிவாரங்களுக்கான யாக குண்டம், சனீஸ்வரர் சன்னதி அருகிலும் அமைக்கப்படும்.
கலெக்டர் ஆலோசனை: கும்பாபிஷேக ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் ஜெயந்தி தலைமை வகித்தார். குடிநீர், கழிப்பிட வசதி, மின் வசதி செய்வது; பாதையை செப்பனிடுதல், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, மருத்துவ வசதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதிகப்படியான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், "பார்க்கிங் வசதி செய்வதுடன், சிறப்பு பஸ் இயக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்; பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும். போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர், தயார் நிலையில் இருக்க வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.