பதிவு செய்த நாள்
08
மார்
2016
12:03
திருவண்ணாமலை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், லட்சார்ச்சனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில், மஹா சிவராத்திரி விழாவும் ஒன்றாகும். இதை முன்னிட்டு, நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, தங்க கவசம் சாத்தப்பட்டது. இதேபோல் உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்று, காலை முதல் மதியம்வரை லட்சார்ச்சனை செய்தனர். மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று இரவு நான்கு கால பூஜை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வெளியூர்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதுகிறது.