பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
மயிலாப்பூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான, கோலவிழி அம்மன் கோவிலுக்கு, நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட, கோலவிழி அம்மன் கோவிலுக்கு, 50 லட்சம் ரூபாயில் திருப்பணிகள், கடந்த நவம்பர் மாதத்தில் துவங்கின. பொங்கல் மேடை, நந்தவனம் உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவடைந்ததும், கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கின. கடந்த 8ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. முதல் கால யாக பூஜை, 9ம் தேதியன்று நடந்தது. 4ம் கால யாக பூஜைகள் நேற்று காலை நிறைவடைந்ததும், காலை, 6:00 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு, சரியாக காலை, 7:15க்கு கோலவிழி அம்மன் விமானம் மற்றும் பரிகார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். காலை, 10:00 மணிக்கு கோலவிழி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மாலை, 5:00 மணிக்கு, முதல் நாள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இரவு, சிம்ம வாகனத்தில் கோலவிழி அம்மன் வீதியுலா நடைபெற்றது.
காவல் துறையுடன் வாக்குவாதம்:
* முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை
* குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை
* கும்பாபிஷேகம் நடைபெற்ற நேரத்தில், கோவிலுக்குள் குறைந்த அளவிலே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண முடியாமல் போனது. பக்தர்கள் தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என, காவல் துறையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
* கூட்ட நெரிசலை காவல் துறை சரிவர கட்டுப்படுத்தவில்லை. வெளியே செல்லும் வழியில் முக்கியமானவர்களை மட்டும் அனுமதித்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. - நமது நிருபர் -