திருப்பூர்: திருப்பூர் அய்யப்பன் கோவிலில், பொதுநலன் வேண்டி பகவதி சேவையும், உற்சவ பலிபூஜையும் விமரிசையாக நடந்தது.
கேரளாவில், பார்வதி, துர்கா, காளி போன்ற தெய்வங்களுக்காக, பகவதி சேவை எனும் பூஜை நடத்தப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, ஆரோக்கியம், செல்வம், நீண்ட ஆயுள், தொழில் வளம் பெருகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. இந்நிலையில், மண்டல பூஜை விழாவின் ஒருபகுதியாக, அய்யப்பன் கோவிலில் பகவதி சேவை பூஜை விமரிசையாக நடந்தது. தந்திரிகள், பகவதி அம்மன் சன்னதி அருகே, பகவதி சேவை எனும் பூஜையை செய்தனர். பக்தர்களின் நவகிரஹ தோஷங்கள் நீங்கி, இறையருள் பெற வேண்டி,பொது வழிபாடு செய்யப்பட்டது. நேற்று காலை உற்சவ பலி பூஜையும், இன்று நவகலச பூஜையும் நடக்கிறது. இரவு பள்ளிவேட்டையும், நாளை அய்யப்ப சுவாமிக்கு, பவானி கூடுதுறையில் ஆராட்டு உற்சவமும் நடைபெற உள்ளது.