ஸ்வாமி சிலைகள் கண்டெடுப்பு : புதுகை அருகே மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2011 11:08
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கட்டுமாவடி மஹாகணபதிபுரம் கிராமத்தில் வயல்வெளியை ஒட்டி புதர்மண்டிக் கிடந்த பகுதியை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் நேற்றுமுன்தினம் சுத்தம் செய்துள்ளனர். அப்போது பூமிக்குள் புதையுண்டு கிடந்த சிவலிங்கம் தென்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள் அப்பகுதியை மேலும் தோண்டியபோது நந்தீஸ்வரர், விநாயகர் மற்றும் பைரவர் சிலைகள் தென்பட்டது. கல்லால் ஆன இச்சிலைகள் ஒவ்வொன்றும் மூன்று அடி முதல் ஐந்து அடிவரை உயரம் உடையது. புதருக்குள் இருந்து சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் மஹாகணபதிபுரம் சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் பரவியது. திரண்டுவந்த கிராம மக்கள் அதே இடத்தை சுத்தம் செய்தபின் சுவாமிச் சிலைகளை திறந்தவெளியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். நேற்று இச்சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது, தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் போன்ற சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கிருஷ்ணாஜிப்பட்டிணம், இடையாத்திமங்கலம், கொள்ளுத்திடல், பாளையப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் மஹாகணபதிபுரம் நேற்று அதிகாலை முதல் விழாக்கோலம் பூண்டது. சுவாமிச் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் பழமை வாய்ந்த சிவன்கோவில் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதால் அப்பகுதியை அகழ்வாராய்ச்சி செய்ய ஆராய்ச்சியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.