பதிவு செய்த நாள்
15
மார்
2016
11:03
சென்னிமலை: சென்னிமலை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவில், பல மணிநேரம் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். சென்னிமலை-ஊத்துக்குளி சாலையில் புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளில், சென்னிமலை மட்டுமல்லாது காங்கேயம், திருப்பூர், பெருந்துறை, ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்ய வருவர். இதன்படி பங்குனி மாத முதல் திங்கள்கிழமையான நேற்று அதிகாலை, 2 மணியளவில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அப்போதிருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல மணி நேரம் நீண்ட வரிசையில், காத்திருந்து தரிசனம் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னிமலை எஸ்.ஐ., ரவீந்திரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.