பதிவு செய்த நாள்
16
மார்
2016
10:03
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், சுவாமி வீதி உலாவின் போது, நேற்று முன்தினம் அம்பிகை உற்சவர் சிலை உடைந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.
ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலையின் அடிப்பாகம் விரிசல் விட்டிருப்பதால், அதற்கு பதில் புதிய உற்சவர் சிலை செய்ய, அறநிலையத்துறை முடிவெடுத்தது; அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், பங்குனி உத்திர திருவிழாவின் போது பழைய சிலையையே சுவாமி வீதி உலாவிற்கு பயன்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரண்டாம் நாள் இரவு சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்த போது, ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி சிலைகளில், அம்மன் சிலை மட்டும் ஆடியது; சிலையின் உடல் பாகங்கள் விழுந்து விடாமல், பிடித்த படி, பத்திரமாக திருப்பி கொண்டு சென்றனர். இதனால் இரவு உபயதாரர்கள் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, உற்சவர் சிலையின் நிலை குறித்து ஆராய, வல்லுனர் குழு, இன்று காஞ்சிபுரம் வந்து சிலையை பார்வையிட்டு, ஆலோசனை நடத்த உள்ளது. சிலை சேதமடைந்துள்ளதை அறிந்துள்ள கோவில் நிர்வாகம், பிரம்மோற்சவத்திற்கு முன் தகுந்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதால் தான், சிலை ஆட்டம் கண்டுள்ளது. உற்சவர் சிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த மாதிரி செய்து வருகின்றனர். - வி.ரகு, பக்தர்
பட்டு நுால் வைத்து கட்டாததால் தான் சிலை ஆடியது; சிலை விழுந்து விடக் கூடாது என்பதற்காகவே, பிடித்து சென்றனர். சிலையை, ’ஜெடிபந்தனம்’ எனப்படும், பற்ற வைப்பு செய்ய, உயர் அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும். நாங்களாக எந்த முடிவும் எடுக்க முடியாது. இதை வேண்டும் என்றே பெரிய விவகாரமாக ஆக்குகின்றனர். - இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர்