பதிவு செய்த நாள்
16
மார்
2016
11:03
சென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா துவங்கி நடந்து வருகிறது. பங்குனிப் பெருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை, சூரிய வட்ட வாகனத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை, 6:00 மணிக்கு, அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா நடந்தது. 20ம் தேதி தேரோட்டம், 21ம் தேதி, அறுபத்து மூவர் விழா நடக்கவுள்ளன.
இதையொட்டி, 23ம் தேதி வரை, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
●மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா, 14ம் தேதியில் இருந்து, 23ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு, தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது
●தேர் திருவிழா, 20ம் தேதி நடைபெறுவதால், அன்று காலை, 7:00 மணியில் இருந்து, நிகழ்ச்சி முடியும் வரையிலும், 21ம் தேதி, அறுபத்து மூவர் பெருவிழா நடக்க இருப்பதால், அன்று மாலை, 3:00 மணியில் இருந்து நிகழ்ச்சி முடியும் வரையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்
●கோவிலை சுற்றியுள்ள, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு, சித்திரகுளம் கீழ் தெருவில் இருந்து, சித்திரகுளம் வடக்கு தெரு, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு, புனித மேரி சாலையில் இருந்து, ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாட வீதி நோக்கி செல்ல வாகனங்கள் அனுமதி இல்லை
●அதுபோல், டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை, லஸ் சந்திப்பு சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலை செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது
●ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலையில் இருந்து, லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் சாலை, டிசில்வா சாலை, சி.பி.ராமசாமி சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளிக்கு செல்லலாம்
●அடையாறில் இருந்து ராயப்பேட்டை வழியாக செல்லும் வாகனங்கள், ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி, சிருங்கேரி மடம் சாலை, வாரன் சாலை, அபிராமபுரம் முதல் தெரு, விவேகானந்தர் கல்லுாரி, சிவசாமி சாலை வழியாக லஸ் பகுதியை அடையலாம்
●மயிலாப்பூர் கோவில் குளம் அருகே உள்ள மாநகர பேருந்து நிறுத்தம், லஸ் சர்ச் சாலையில், அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டு உள்ளது
●ராயப்பேட்டை மற்றும் சாந்தோம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், லஸ் சர்ச் சாலை வடக்கு பகுதியில் உள்ள, காமதேனு திருமண மண்டபம், திரையரங்கம் அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டும்
●தேனாம்பேட்டை, நந்தனம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், சிருங்கேரி மடம், ரங்கா சாலை வழியாக, வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் எம்.ஆர்.டி.எஸ்.,பாம் சாய்பாபா கோவில் அருகே நிறுத்திக் கொள்ளலாம்
●மாதா சர்ச் சாலை, தெற்கு கால்வாய் சாலை வழியாக கிழக்கில் இருந்து மந்தைவெளி நோக்கி வரும் வாகனங்கள், மந்தைவெளி ஆசுவளு அருகே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.