கருட சேவை என்றாலே, காஞ்சிபுரத்தில் நடக்கும் கருட உத்ஸவம்தான் எல்லோர் நினைவுக்கும் வரும். தேவாதிராஜன், வரதன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ வரதருக்கு பிரம்மாவே நேரில் வந்து இந்த உத்ஸவங்களை நடத்துவதால், பிரம்மோத்ஸவம் என்பது காஞ்சிபுரத்துக்குத்தான் பொருந்தும். வைகாசி மாதத்தில் நடக்கும் இந்த கருட சேவை உத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா விடியற்காலையில் நடக்கிறது. தொட்டாச்சார்யர் என்கிற பரம வைணவ பக்தர், ஒவ்வொரு வருடமும் சோளிங்கபுரத்திலிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்து கருட வாகனத்தில் காட்சியளிக்கும் பகவானைத் தரிசித்துவிட்டுப் போவார். ஒருமுறை உடல்நிலை காரணமாக அவரால் காஞ்சிபுரத்துக்குச் செல்லமுடியவில்லை. இந்நிலையில் சோளிங்கபுரம் தக்கான் குளக்கரையில் நின்றவாறு, கருட சேவையைக் கண்டுகளிக்க முடியவில்லையே என்று பகவானை நினைத்து மனமுருகப் பாடினார். பக்தர் தவித்திருக்க, அந்தப் பரந்தாமன் விட்டுவிடுவாரா என்ன ! ஸ்ரீவரதர் கருட வாகனத்தோடு சோளிங்கபுரம் சென்று தொட்டாச்சார்யருக்கு தரிசனம் கொடுத்தார். இதே சமயத்தில், காஞ்சியில் கருட வாகனத்தில் ஸ்ரீவரதரைத் தூக்கிக்கொண்டு வந்த பக்தர்களால், கோயில் கோபுர வாசலை வந்தடைந்ததும் தூக்க முடியாமல் போனது. இந்தச் சமயத்தில்தான் பகவான் சோளிங்கபுரம் சென்று தொட்டாச்சார்யருக்குத் தரிசனம் கொடுத்ததாக ஐதீகம். இதை நினைவுகூரும் விதமாக, இப்போதும் கருட வாகனம் கோபுர வாசலை வந்தடைந்தவுடன், ஒரு பக்கக் குடையால் கருட வாகனத்தை மறைத்துக்கொண்டு, பிறகு 10 நிமிடம் கழித்து குடையை நிமிர்த்தி பகவான் கருட தரிசனம் கொடுப்பதானதொரு நிகழ்வு நடைபெறும். இதன்பின்னர் கற்பூர தீபாராதனை நடைபெறும். கோபுரத்துக்கு வெளியே குழுமியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி, வரதா என்று குரலெழுப்பி தரிசனம் செய்வதையே தொட்டாச்சார்யர் சேவை யாகக் கொண்டாடுகிறார்கள். சோளிங்கபுரத்தில் தக்கான் குளக்கரையில் தொட்டாச்சார்யருக்கு சேவை சாதித்த இடத்தில், கருட வாகனத்துடன் பகவனை இன்றும் சிலாரூபமாகத் தரிசிக்கலாம். காஞ்சி கோபுர வாசலில் கருட வாகனம் வந்து நின்றவுடன் தவறாமல் ஸ்ரீ கருடப்பருந்து, கோபுரத்தின்மீது மூன்று முறை வட்டமிட்டுச் செல்வதையும் கண்டு அனுபவிக்கலாம். உண்மையான பக்தர்களுக்கு, தேடி வந்து கடவுள் தரிசனம் தருவார் என்பது இந்நிகழ்விலிருந்து நிதர்சனமாக விளங்குகிறது.