தோஷங்கள் என்பவை நமது தீய வினைகளின் பயன்கள், அவை பல வகை. அவற்றில் சில வீர்யம் குறைந்தவையாகவும் அமைந்திருக்கும். வீர்யம் குறைந்தவை, அதற்குரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் விலகிவிடும். சிலவற்றின் கடுமை குறையும். சிலவற்றுக்கு உரிய பலாப்பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். பரிகாரங்கள், கண்டிப்பாக மனிதனுக்கு ஒரு மாறுதலைக் கொடுக்கும். எவ்வித சந்தேகமும் வேண்டாம். ஏனெனில், இவை கடவுளால் ஜீவன்மாக்கள் உய்யக் கொடுக்கப்பட்டவை. நடைமுறையில் ஒருவன் தவறு செய்வாரே எனில், அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும் நன்னடத்தையின் காரணமாக அவர் தண்டனைக் காலத்துக்குள்ளேயே விடுவிக்கப்படுகிறார். இதுபோன்று நாம் நம்மால் இயன்ற நல்ல காரியங்களை எந்தவித விருப்பு வெறுப்புமின்றி செய்து கொண்டிருப்போமானால், நமது தீய வினைகளில் பலம் குறைந்து நமக்கு நல்வழி பிறக்கும். வேதோ ஹி தர்ம மூலம் என்று வேதமே தர்மத்துக்கு மூலம் என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றில் சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஒருவர் செய்து வருவாரேயானால், கடவுளின் அருளினால் அவரது தோஷங்கள் களையப்பட்டு உயர்ந்த நிலையை அடைவார்.