திருப்பரங்குன்றம் முருகன் கோவில் என்றாலும், இங்கு மூலவர் சிவன் தான். அவரை சத்தியகிரீஸ்வரர் என்று அழைக்கிறார்கள். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இவர் எதிரில் பவளக்கனிவாய் பெருமாள் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, மதங்க முனிவர் ஆகியோர் உள்ளனர். சிவனுக்கு எதிரே நந்தி இருக்க வேண்டிய இடத்தில் நாராயணர் இங்கிருப்பதால் இவரை மால் விடை என்கின்றனர். மால் என்றால் திருமால். விடை என்றால் நந்தி அல்லது ரிஷபம்(காளை), திருமால் நந்தீஸ்வரர் அம்சமாக இருக்கிறார். சத்தியகிரீஸ்வரருக்கு பின்புறத்தில் சோமாஸ்கந்தர் (சிவன், பார்வதியின் நடுவில் முருகன் அமர்ந்த கோலம்) புடைப்புச் சிற்பம் உள்ளது.