பதிவு செய்த நாள்
23
மார்
2016
12:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 9ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்.,21 வரை நடக்கிறது.
கோயில் இணை கமிஷனர் நா.நடராஜன் கூறியதாவது: உற்சவ நாட்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் நான்கு மாசி வீதிகளில் புறப்பாடாகி வரும். எனவே விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை, சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ள வேண்டும். வேப்பிலை தோரணங்கள் சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைத்து கொள்ள வேண்டும்.மேற்படி திருவிழா நாட்களில் காலை, இரவு இரு வேளைகளிலும் திருவீதிகளில் சுவாமி புறப்பாடாகி வரும். அவ்வமயம் பக்தர்களால் வழங்கப்படும் மாலைகள் சுவாமிக்கு சாத்துப்படி செய்யப்படும். உற்சவம் ஆரம்பமாகும் ஏப்.,9 முதல் அழகர்கோவில், கள்ளழகர் ஆஸ்தானம் சேரும் ஏப்.,25 வரை, கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபய திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகிய சேவைகள் பதிவு செய்து நடத்தப்படுவதில்லை.பூச்சொரிதல் விழாமீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலின் பூச்சொரிதல் விழா நாளை (மார்ச் 24) நடக்கிறது. அன்றையதினம் மாலை 6.00 மணியளவில் மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி, கிழக்கு வாயிலிலிருந்து புறப்பாடாகி, அம்மன் சன்னதி தெரு, கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளிவீதி, கீழ வெளிவீதி, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வந்து சேரும். பின் மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடைபெறும். மாரியம்மன் வீதி உலாவின்போது பக்தர்கள் மலர்கள், மாலைகளை காணிக்கையாக தரலாம் என்றார்.