பதிவு செய்த நாள்
24
மார்
2016
11:03
காரிமங்கலம்: முருகன் கோவிலுக்கு, நாய் பால் குடம் எடுத்துச் சென்றதை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். தர்மபுரி மாவட்டம், தும்பலஹள்ளியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர், கடந்த, ஏழு ஆண்டுகளாக மணி என்ற நாயை வளர்த்து வருகிறார். தங்கவேல், தன் கறவை மாடுகளிடம் இருந்து பாலை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள பால் பூத்துக்கு கொண்டு செல்லும் போது, மணியும் உடன் வந்து சென்றுள்ளது. இதையடுத்து தங்கவேல், மணி மூலம் பால் பூத்துக்கு பாலை அனுப்ப முடிவு செய்து, பிரத்தியேக வண்டியை தயார் செய்து, அவ்வண்டியை நாய் மணி மீது பொருத்தி, காலை, மாலை வேளைகளில் பால் கேனை பூத்துக்கு அனுப்பி வந்தார்.
கடந்த, நான்காண்டுக்கு முன் பாலை எடுத்துச் சென்ற போது, அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில் நாய் மணி படுகாயம் அடைந்தது. மணி உயிர் பிழைக்கவும், மீண்டும் உடல் நலம் பெற, தங்கவேல் தும்பலஹள்ளியில் உள்ள பால்மலை முருகன் கோவிலில் வேண்டிக் கொண்டார். நாய் மணி மீண்டு வந்ததை அடுத்து, தனது வேண்டுதல் படி, பால்மலை முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர விழாவின் போது, அலங்கரிக்கப்பட்ட வண்டியில் பால்குடம் மற்றும் அலகை வைத்து, நாய் மணியை பக்தர்களுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றார். நாய் மணி கோவிலை அடைந்தவுடன், பால்குடத்தில் இருந்த பாலை எடுத்து பூசாரிகள், முருகனுக்கு அபிேஷகம் செய்தனர். முருகனுக்கு நாய் பால் குடம் எடுத்துச் சென்றது, பக்தர்களை மட்டும் அன்றி, அவ்வழியாக சென்ற பொதுமக்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.