பதிவு செய்த நாள்
24
மார்
2016
11:03
பழநி:பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனும் சரண கோஷத்துடன், பழநி மலைக்கோவில் கிரிவீதியில், தேரோட்டம் நடந்தது. கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு புகழ்பெற்ற, பழநி பங்குனி உத்திர விழா, திருஆவினன்குடி கோவிலில், மார்ச் 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், ஏழாம் நாளான நேற்று, பங்குனி உத்திர தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலையில் சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நடந்தது. சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு, மாலை 4:25 மணிக்கு, வடம் பிடித்து தேரோட்டம் ஆரம்பமானது. நான்கு கிரிவீதிகள் வழியாக, தேர் வலம் வரும் போது, பக்தர்கள், நவதானியங்கள், பழங்கள், நாணயங்களை தேரின் மீது வீசி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என, சரண கோஷங்கள் எழுப்பினர். மாலை 6:35 மணிக்கு, தேர் நிலையை வந்தடைந்தது.