பதிவு செய்த நாள்
24
மார்
2016
02:03
திருப்பதி: திருமலையில், 250 வயது முடிந்ததாக கூறப்படும் ம.பி., சாமியார் சார்பில் நடந்த ஹோமத்தை, திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பர்பானி ஆசிரமத்தை சேர்ந்த சாமியார், பர்பானி தாதாஜி. தனக்கு, 250 வயதாவதாக அவரே கூறி வருகிறார். மார்ச், 22ல், பர்பானி தாதாஜி, 250 சீடர்களுடன் திருமலைக்கு வந்தார். திருமலையில், பத்மாவதி விருந்தினர் மாளிகை அருகில், ஸ்ரீவாரி விருந்தினர் மாளிகை உள்ளது. அங்கு, பர்பானி தாதாஜியின், 250 வயதை ஒட்டி, சிறப்பு பூஜை, ஹோமம் நடத்தினர். தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள், அங்கு விரைந்து சென்று, அனுமதியில்லாமல் நடந்த ஹோமத்தை தடுத்தி நிறுத்தினர். தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில், தனியார் ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் ஹோமம் நடத்த கூடாது என எச்சரித்து, அவர்களை திருப்பி அனுப்பினர்.