பதிவு செய்த நாள்
24
மார்
2016
02:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில், காணாமல் போன நகைகள் குறித்த வழக்கில், இதுவரை நடவடிக்கை எடுக்காத, அறநிலைய துறை ஆணையர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என, சி.பி.சி.ஐ.டி போலீசில், திருத்தொண்டர் திருச்சபையினர் புகார் கொடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் 1996ல் மாயமாகின. இந்த சம்பவம், 2010ல், தணிக்கை அறிக்கை மூலம் வெளியில் தெரியவந்தது. அதன்பின், இந்து சமய அறநிலைய துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த நிலையில், இந்த வழக்கில் உடனடியாக விசாரணை நடத்தக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், சி.பி.சி.ஐ.டி., போலீசிடம், திருத்தொண்டர் திருச்சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 1996ம் ஆண்டு, சுவாமிக்குசொந்தமான, ஏராளமான நகைகள் காணாமல் போனதாக பக்தர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதையடுத்து 2010ம் ஆண்டு அறநிலையத் துறை தணிக்கை துறையினர், கோவிலில் தணிக்கை செய்து அறிக்கை வெளியிட்டனர்.அதன்படி, காசுமாலை, கிரீடம் உள்ளிட்ட, சுவாமி நகைகள் காணாமல் போயுள்ளதாகவும், சிலவற்றில் நகைகளின் எடை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.காணாமல் போன நகைகளின் மொத்த எடை, 1.202 கிலோ தங்கம் மற்றும் 865.5 கிராம் வெள்ளி என, தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவற்றின் இன்றைய மதிப்பு, 3௦ லட்சம் ரூபாய்.இதை, தனி கவனம்செலுத்தி விசாரிக்க வேண்டும், என, தணிக்கை அதிகாரி,2011ல், அப்போதைய அறநிலைய துறை ஆணையருக்கு, கடிதம் அனுப்பினார். ஆனால் இதுகுறித்து, எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அதனால், இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டோர், திருட்டு குறித்து விசாரணை நடத்தாத கோவில் செயல் அலுவலர் மற்றும் அறநிலைய துறை ஆணையர் என ஆகியோரிடம் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவிலில் இருந்த பழைய நகைகளில், சிலவற்றில் அரக்கு அதிகம் இருந்துள்ளது. நகைகளை சுத்தம் செய்தபோது, அதன் எடை மட்டும் தான் குறைந்துள்ளது. பெரிய அளவில் நகையின் எடை குறைந்ததால் தான், தணிக்கை குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நமது நிருபர் -