பதிவு செய்த நாள்
26
மார்
2016
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. திருவண்ணாமலை - செங்கம் சாலை, அக்ரஹாரக் கொல்லை பகுதியில், ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின் சமாதி ஆலயம், ஆஸ்ரம பிரதான வாயிலில் உள்ள, யோக கணபதி சன்னதி ஆகியவைகளுக்கு, கடந்த, 2004 ஜூன், 27ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 12 ஆண்டு முடிந்த நிலையில், தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை, 4 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, மஹா பூர்ணாஹதி, தீபாரதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை, 6.20 மணிக்கு மீன லக்னத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமார் மகாலிங்க மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு வெள்ளி ரதத்தில் பகவானின் உற்சவர் உலா நடந்தது. கும்பாபிஷேக விழாவை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவில், ஆஸ்ரம நிர்வாகி ஜஸ்டீஸ் அருணாசலம், தபோவனம் நித்யானந்தகிரி சுவாமி, ரமணசரணதீர்த்த நொச்சூர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.