பதிவு செய்த நாள்
28
மார்
2016
12:03
உளுந்துார்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா வரும் 5ம் தேதி துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு வரும் ஏப்., 5ம் தேதி சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்குகிறது. 6ம் தேதி பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், 7 ம் தேதி சந்தனு சரிதம், 8 ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 9ம் தேதி தர்மர் பிறப்பு, 10ம் தேதி பாஞ்சாலி பிறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 11ம் தேதி பகாசூரன் வதம், 12ம் தேதி பாஞ்சாலி திருமணம், 13ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு, 14ம் தேதி ராஜசூய யாகம் நிகழ்ச்சிகளும், 15ம் தேதி வெள்ளிக்கால் நடுதல், 16ம் தேதி கிருஷ்ணன் துாது, 17 ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம், 18 ம் தேதி கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வரும் 19ம் தேதி இரவு சுவாமிக்கு திருக்கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மும்பை, சென்னை, டில்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கைகளால் தாலி அணிந்து, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். 20ம் தேதி காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து நத்தம், தொட்டி வழியாக தேர் பந்தலடிக்கு சென்றடையும். அங்கு மதியம் 12:00 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து விதவை கோலம் பூண்டு அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்துவிட்டு தங்கள் ஊருக்கு திரும்புவர். அன்று மாலை 5;00 மணிக்கு உறுமை சோறு (பலி சாதம்) படையல் நடக்கிறது. மாலை 7:00 மணிக்கு காளிக்கோவிலில் அரவான் உயிர்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டு வரப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்து செல்லப்படும். 22ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெரு விழா நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 5ம் தேதி முதல் 22ம் தேதி வரை மகா பாரத சொற்பொழிவுகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
சுப நிகழ்ச்சிகளுக்கு தடை: மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுப்படுத்தும் வகையில், சித்திரை பெருவிழாவின் 16ம் நாளில் அழுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணைநல்லுார், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஏப்ரல் 5ம் தேதி முதல் 22ம் தேதி வரை 18 நாட்களுக்கு எந்த சுப நிகழ்ச்சிகளையும் செய்யமாட்டார்கள். இதே வேளையில் கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் வழிப்படுகின்றனர்.