பதிவு செய்த நாள்
30
மார்
2016
12:03
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், சின்ன மாரியம்மன் கோவிலில், இன்று காலை தேர் வடம் பிடித்தல் மற்றும் அம்மன் வீதியுலா நடக்கிறது. தமிழகத்தில் புகழ் பெற்ற கிராம கோவில் தெய்வம் மாரியம்மன். அனைத்து சமுதாயத்தினரும் வழிபடும் பெண் தெய்வம். மாரி என்பதற்கு, மழை, குளிர்ச்சி என்று பொருள். இதனால், மாரியம்மனை குளிர்ச்சி தரும் தெய்வம் எனலாம். வெப்பத்தால் நாட்டில் ஏற்படும் வறட்சிக்குப்பின், மழையை தந்து, மீண்டும் செழிக்க செய்யும் தெய்வம் மாரியம்மன் என மக்கள் நம்புகின்றனர். இதன்படி, ஈரோட்டில் முப்பெரும் கோவில்களாக பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் என, மூன்று மாரியம்மன் கோவில்கள் தனித்தனியாக சிறப்புற்றுள்ளது. பெரும்பாலான அம்மன் கோவில்கள், வடக்கு முகமாக அமைந்திருக்கும். இங்கு பெரிய மாரியம்மன் கோவில் மட்டும் வடக்கு முகமாகவும், மற்ற இரு கோவில்களும் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.
ஈரோடு மாநகரில், பிரப் ரோட்டில், மாநகராட்சிக்கு எதிரே பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாரியம்மன், ரேணுகா தேவியின் (மாரியம்மன்) மகனான பரசுராமனும், பெண் அடியார் சிலையும் உள்ளது. பெரிய மாரியம்மனை பிள்ளை வரம் தரும் அம்மன் என்பர். மகப்பேறு வேண்டுவோர், 45 வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வந்து வணங்கி, மகப்பேறு அடைகின்றனர். நோய் வந்தோருக்கு விரைவில் சுகம் கிடைக்கிறது. இக்கோவிலில், மூன்று கால பூஜைகள் நடக்கிறது.
இக்கோவிலுடன் இணைந்த சின்ன மாரியம்மன் கோவில், பெரியார் வீதியில் உள்ளது. இந்த இரு கோவில்களுக்கு இடையே வாய்க்கால் மாரியம்மன் உள்ளதால், இதை நடு மாரியம்மன் என்றும் அழைப்பர். இக்கோவில்களில் பங்குனி குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா, இம்மூன்று கோவில்களையும் இணைத்து நடப்பதால், ஊரே விழாக்கோலம் பூணும். இந்தாண்டு குண்டம் திருவிழா, மார்ச், 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 24ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் கம்பங்களுக்கு தண்ணீர், பால் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால் குடம் சுமந்தும் தினமும் நூற்றுக்கணக்கானார் ஊர்வமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை, 5.30 மணிக்கு, காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வருதல், பெரிய மாரியம்மன் திருவீதியுலா நடந்தது.
இன்று (30ம் தேதி) காலை, 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர்வடம் பிடித்தலும், பொங்கல் வைத்தலும், மாலை, 4 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. நாளை (31ம் தேதி) மாலை, 4 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்தலும், இரவு, 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதியுலாவும் நடக்கிறது. ஏப்., 1ம் தேதி மாலை, 4 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து, சின்ன மாரியம்மன் கோவில் நிலை சேர்கிறது. அன்று இரவு, 9.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதியுலாவும், இரவு, 10 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதியுலாவும் நடக்க உள்ளது. ஏப்.,2ம் தேதி மாலை, 3 மணிக்கு கம்பங்களை எடுத்து மஞ்சள் நீர் விழாவுடன், வழக்கப்படி காரை வாய்க்காலில் விடுதல் நடக்கிறது. 3ம் தேதி காலை, 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா, கோவில் செயல் அலுவலர் ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.