பதிவு செய்த நாள்
02
ஏப்
2016
11:04
திருப்பதி: திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம், ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது.
திருமலையில், தர்ம தரிசனம், பாத யாத்திரை தரிசனம் தவிர, வாடகை அறை முன்பதிவு, இணையதளத்தில், 300 ரூபாய், விரைவு தரிசன டிக்கெட், 50 ரூபாய் சுதர்சன தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவா டிக்கெட்களை முன்பதிவு செய்யவும், தேவஸ்தானம், ஆதார் அட்டையை
கட்டாயமாக்கி உள்ளது. இந்த நடைமுறை, ஏப்., 15 முதல் அமலுக்கு வருகிறது. திருமலைக்கு வரும் பக்தர்கள், ஆதார் அட்டையை எடுத்து வர வேண்டும்; ஆதார் அட்டை இல்லாதோர், தங்களுடன் வரும் மற்றவர்களின், ஆதார் அட்டை மூலம், வாடகை அறை, தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டிக்கெட் ரெடி: திருமலையில், மே மாதத்திற்கான, 55 ஆயிரத்து, 669 ஆர்ஜித சேவா டிக்கெட்கள்,
இணையதள முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளன. மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை காலை, 11:00 மணி முதல் முன்பதிவு செய்யலாம். சுப்ரபாதம் - 6,279, தோமாலை - 130, அர்ச்சனா - 130, விசேஷ பூஜை - 1,875, அஷ்டதளபாத பத்மாராதனை - 100, நிஜபாத தரிசனம் - 1,500, கல்யாணோற்சவம் - 11 ஆயிரத்து, 625, ஊஞ்சல் சேவை - 3,100, வசந்தோற்சவம் - 11 ஆயிரத்து 610, ஆர்ஜித பிரம்மோற்சவம் - 6,020 மற்றும் ஸஹஸ்ர தீபாலங்கார சேவைக்கு, 13 ஆயிரத்து, 300 டிக்கெட்களும் உள்ளன.