ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நந்தி மண்டபத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் ரூ.3.50 லட்சம் செலவில் புதிய கதவு போடபட்டுள்ளது.
ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 11ம் நூற்றாண்டில் உருவானது. 17, 18ம் நூற்றாண்டில் சுவாமி, அம்மன் சன்னதி, மூன்றாம் பிரகாரம், ராஜகோபுரங்கள் கட்டுமான பணிகள் முடிந்தது. பிரசித்த பெற்ற இக்கோயிலில் சமீபத்தில் ரூ. 7.90 கோடி செலவில் திருப்பணிகள் முடிந்து, கடந்த ஜன.,20ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் சுவாமி சன்னதி முன்புள்ள நந்தி மண்டபத்தில் உள்ள 15 அடி உயர பிரதான கதவு சேதமடைந்து கீழே விழுந்தது. 100 ஆண்டுகள் பழமையான கதவு திடிரென்று விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து புதிய கதவு போட கோயில் நிர்வாகம் முடிவுசெய்தது. ரூ.3.50 லட்சம் செலவில் மரத்தால் ஆன கலைநயமிக்க புதிய கதவு பொருத்தப்பட்டது. தொடர்ந்து ராஜகோபுரம் கீழே உள்ள சேதமடைந்த பழமையான கதவுகளை மாற்றி புதிய கதவுகள் போட உள்ளதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.