பதிவு செய்த நாள்
04
ஏப்
2016
12:04
பழநி: பழநி மலைக்கோயில் தண்டாயுதபாணிசுவாமி கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட நான்கு விநாயகர் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பழநி அடிவாரம் சரவணப்பொய்கை விநாயகர் கோயில், தலைவலிதீர்க்கும் விநாயகர்கோயில், கைலாசகிரி விநாயகர் கோயில் மற்றும் ராக்கால மடம் விநாயகர் ஆகிய நான்கு கோயில்களில் அமிர்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமண்ய சிவாச்சாரியர் கொண்ட குழுவினர் மூலம் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக ஏப்.,2 முதல் கணபதி ஹோமம், மருந்து சாற்றுதல், சிறப்பு வேள்வி பூஜை, யாகபூஜைகள் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 8.40 மணிக்கு சரவணப்பொய்கை விநாயகர் கோயிலில் கோபுர விமானங்களில் புனித கலசநீர் ஊற்றப்பட்டு மூலவருக்கும் கும்பாபிஷேகம், அபிஷேக தீபாராதனை நடந்தது. இதைப்போலவே தலைவலிதீர்க்கும் விநாயகர், ரோப்கார் ஸ்டேஷன் கைலாச விநாயகர், ராக்கால மடம் விநாயகர் கோயில்களில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது.
ஏப்.11ல் மகா கும்பாபிஷேக விழாவிற்காக தெற்குகிரிவீதி வனதுர்க்கையம்மன் கோயில், மேற்குகிரிவீதி மகிஷாசூரவர்த்தினி அம்மன் கோயில்களில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா, பழநி எம்.எல்.ஏ.,வேணுகோபாலு, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் மற்றும் நகர முக்கியபிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.