தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா கோலாகல துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2016 10:04
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் மிக கோலாகலமாக நேற்று தொடங்கியது. உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வர் கோயிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் கோயில் வாளகத்தில் நேற்று காலை 6 மணி முதல் 7.30 வரை நடந்தது.
இதை தொடர்ந்து 2ம் நாள் திருவிழாவை முன்னிட்டு வருகிற இன்று மாலை சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. நாளை மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் ஊர்வலம், 7ம் தேதிகாலை விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மாலை மேஷவாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 8ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமி பல்லக்கில் புறப்பாடும், மாலை சுப்பிரமணியர் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் ஊர்வலம் நடக்கிறது. 9ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரமும், மாலை சைவ சமயாச்சாரியார் நால்வர் புறப்பாடு நடக்கிறது. 10ம் தேதி காலை நால்வர் பல்லக்கில் கோயிலுக்குள் புறப்பாடு, மாலை சூரிய பிரபையில் சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து காலை, மாலை சுவாமிகள் புறப்பாடுகளுடன் வருகிற 18ம் தேதி காலை 5.30 மணிக்கு தியாகராஜர் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளி, காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. தேரோட்டம் 4 ராஜவீதிகளில் சென்று மாலை தேர் மண்டபத்தை வந்தடைக்கிறது. வருகிற 21ம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடக்கிறது. அதே போல் தினமும் இரவு கோயில் வளாகத்தில் சின்னமேளம் என்ற கலை நிகழ்ச்சி நடக்கிறது.